திங்கள், 5 மார்ச், 2012

எனைப் பிரிந்தது உன்..! - காதல் தோல்விக் கவிதை


எனை மறந்தது உன் மனமென்றால்
இறந்து போனது என் மனமன்றோ...
எனைப் பிரிந்தது உன் உறவென்றால்
பிரிந்து போனது என் உயிரன்றோ...
எனை துறந்தது உன் இதயமென்றால்
துடிக்க மறந்ததது என் இதயமன்றோ...
எனை தொலைத்தது உன் கண்களென்றால்
தொலைந்து போனது என் கண்களன்றோ...
ஒரு கணமும் உனைப் பிரியேன்...
உன் துணையாய் நானிருப்பேன்...
என்றாயே பெண்ணே..!
இன்றோ வேறொருவன் துணையாகி
உனக்கு பதில் எனக்கு
துன்பத்தை துணையாக்கி விட்டாயே..!
உன்னைப் போலென்னால்
மாற முடியவில்லையே...
வேறொருத்தியை துணையாக ஏற்க
என் மனதில் இடமுமில்லையே...
என் செய்வேன் பெண்ணே...
காலமெனை மாற்றும் என்றார்கள்
காலம்தான் மாறியது...
உன்னால் ஏற்பட்ட காயம்...
இன்னும்... இன்னும் என் மனதில்...
ஆறவில்லையடி...
அதை ஆற்றவும் நினைக்கவில்லையடி...
காயத்தை ஆற்றி விட்டால்
உன்மேல் நான் கொண்ட மெய்க்காதல்
பொய்யாகிவிடுமடி...
என் மெய் இடுகாடு போகும் வரை
என் காதல் மெய்யானதாகவே இருக்குமடி..!

சூழ்நிலைக் கைதி?



'உனைப் பார்த்துப் பேசியே
பலநாள் ஆகிறது தேவி...
எனைக் காண 
எப்போது வருவாய் தேவி..?'
என்றேன்..!

அவளோ...
'என் பெற்றோரிருக்கின்றனர்
என் உடன் பிறந்தோரிருக்கின்றனர்
உனை இப்போது காண வருவது
இயலாது கண்ணா...
நான் இங்கு கைதியாக இருக்கிறேன்
சூழ்நிலைக் கைதியாகவும்
இருக்கிறேன்' என்றாள்...

உனக்காகப் பிறந்த எனை
உன் காதலின் கைதியாக்கி விட்டு
நீயோ அங்கே கைதி என்கிறாய்...
இதற்கு நான் யார் மீது குற்றம் சொல்ல..?

பீனிக்ஸ் பறவையாய்..!


சுதந்திரப் பறவையாய்
பறந்து கொண்டிருந்த நான்
உன்னால் பீனிக்ஸ் பறவையாய்
மாறிப் போனேனடி...
அதன் காரணம் ...
ஒவ்வொரு முறை
உனைக் காணும் போதும்
புதிதாய் நான் உயிர்த்தெழுகிறேனே..!

செல்போனும் காதலியும்..!


செல்போனும் காதலியும்
இரட்டைப் பிறவிகள் போல..!
எப்போதும் நம் அரவணைப்பிலேயே
இருக்க விரும்புவார்கள்..!
அவர்களை கவனிக்கா விட்டால்
முதலில் சிணுங்குவார்கள்..!
சிணுங்கிய பிறகும் வாரி எடுத்து
அணைக்கா விட்டால்
அலறித் துடிப்பார்கள்..!
அதையும் கண்டு கொள்ளாமல்
விட்டு விட்டால்
கோபித்து ஊமையாவார்கள்..!
நாமாய் பார்த்து அவர்களிடம் பேசும் வரை
ஊமையாய்த்தான் இருப்பார்கள்..!

உன்னைச் சுற்றியே..!


அன்பை திகட்டத் திகட்டப்
புகட்டி விட்டு...
அலைகடல் தாண்டி
அயல்நாடு சென்று விட்டாய்..!
ஆறு நாட்களுக்கொரு முறை
அலைபேசியில் அழைத்து
மறந்தாயா என் அன்பே..?
என்ற கேள்வியை என்னிடம்
மறவாமல் கேட்கிறாய்..!
உன்னை மறந்தால் தானே
நான் நினைப்பதற்கு..!

அன்னையை மறந்தேன் எனில்
அகிலத்தை மறந்தவனாவேன்..!
அய்யனை மறந்தேன் எனில்
அறிவை மறந்தவனாவேன்..!
உன்னை மறந்தேன் எனில்
உயிரையே மறந்தவனாவேன்..!
என்னுடல் கூடு மட்டும்தானிங்கே...
என்னுயிரும் உறவும் நினைவும்
எக்கணமும் உன்னைச் சுற்றியே..!

காதலுக்கு அனுமதி..?


ரோஜாவிடம் அனுமதி கேட்டு
பனித்துளி அதன்மேல் படர்வதில்லை..!
நிலவிடம் அனுமதி கேட்டு
அல்லி மலர் அழகாய்ப் பூப்பதில்லை...
பூவிடம் அனுமதி கேட்டு
தேனை வண்டு குடிப்பதில்லை..!
அதே போலத்தான்
யாரிடமும் அனுமதி கேட்டு
வருவதில்லை காதல்..!
அன்பொழுகும் அழகைக் கண்டால்
ஆர்ப்பரித்து வந்து விடும் காதல்..!
உன் மேல் நான் கொண்டதைப் போல..!

உள்ளத்தின் வலிகளை..!


உள்ளத்தின் வலிகளை
உரியவளிடம் சொன்னால்...
வலியது மறையும்
என்றாய் பெண்ணே..!
என் உள்ளத்தின் வலியே
நீயென்றால் நான்
யாரிடம் போய்ச் சொல்ல..!