திங்கள், 5 மார்ச், 2012

எனைப் பிரிந்தது உன்..! - காதல் தோல்விக் கவிதை


எனை மறந்தது உன் மனமென்றால்
இறந்து போனது என் மனமன்றோ...
எனைப் பிரிந்தது உன் உறவென்றால்
பிரிந்து போனது என் உயிரன்றோ...
எனை துறந்தது உன் இதயமென்றால்
துடிக்க மறந்ததது என் இதயமன்றோ...
எனை தொலைத்தது உன் கண்களென்றால்
தொலைந்து போனது என் கண்களன்றோ...
ஒரு கணமும் உனைப் பிரியேன்...
உன் துணையாய் நானிருப்பேன்...
என்றாயே பெண்ணே..!
இன்றோ வேறொருவன் துணையாகி
உனக்கு பதில் எனக்கு
துன்பத்தை துணையாக்கி விட்டாயே..!
உன்னைப் போலென்னால்
மாற முடியவில்லையே...
வேறொருத்தியை துணையாக ஏற்க
என் மனதில் இடமுமில்லையே...
என் செய்வேன் பெண்ணே...
காலமெனை மாற்றும் என்றார்கள்
காலம்தான் மாறியது...
உன்னால் ஏற்பட்ட காயம்...
இன்னும்... இன்னும் என் மனதில்...
ஆறவில்லையடி...
அதை ஆற்றவும் நினைக்கவில்லையடி...
காயத்தை ஆற்றி விட்டால்
உன்மேல் நான் கொண்ட மெய்க்காதல்
பொய்யாகிவிடுமடி...
என் மெய் இடுகாடு போகும் வரை
என் காதல் மெய்யானதாகவே இருக்குமடி..!

சூழ்நிலைக் கைதி?



'உனைப் பார்த்துப் பேசியே
பலநாள் ஆகிறது தேவி...
எனைக் காண 
எப்போது வருவாய் தேவி..?'
என்றேன்..!

அவளோ...
'என் பெற்றோரிருக்கின்றனர்
என் உடன் பிறந்தோரிருக்கின்றனர்
உனை இப்போது காண வருவது
இயலாது கண்ணா...
நான் இங்கு கைதியாக இருக்கிறேன்
சூழ்நிலைக் கைதியாகவும்
இருக்கிறேன்' என்றாள்...

உனக்காகப் பிறந்த எனை
உன் காதலின் கைதியாக்கி விட்டு
நீயோ அங்கே கைதி என்கிறாய்...
இதற்கு நான் யார் மீது குற்றம் சொல்ல..?

பீனிக்ஸ் பறவையாய்..!


சுதந்திரப் பறவையாய்
பறந்து கொண்டிருந்த நான்
உன்னால் பீனிக்ஸ் பறவையாய்
மாறிப் போனேனடி...
அதன் காரணம் ...
ஒவ்வொரு முறை
உனைக் காணும் போதும்
புதிதாய் நான் உயிர்த்தெழுகிறேனே..!

செல்போனும் காதலியும்..!


செல்போனும் காதலியும்
இரட்டைப் பிறவிகள் போல..!
எப்போதும் நம் அரவணைப்பிலேயே
இருக்க விரும்புவார்கள்..!
அவர்களை கவனிக்கா விட்டால்
முதலில் சிணுங்குவார்கள்..!
சிணுங்கிய பிறகும் வாரி எடுத்து
அணைக்கா விட்டால்
அலறித் துடிப்பார்கள்..!
அதையும் கண்டு கொள்ளாமல்
விட்டு விட்டால்
கோபித்து ஊமையாவார்கள்..!
நாமாய் பார்த்து அவர்களிடம் பேசும் வரை
ஊமையாய்த்தான் இருப்பார்கள்..!

உன்னைச் சுற்றியே..!


அன்பை திகட்டத் திகட்டப்
புகட்டி விட்டு...
அலைகடல் தாண்டி
அயல்நாடு சென்று விட்டாய்..!
ஆறு நாட்களுக்கொரு முறை
அலைபேசியில் அழைத்து
மறந்தாயா என் அன்பே..?
என்ற கேள்வியை என்னிடம்
மறவாமல் கேட்கிறாய்..!
உன்னை மறந்தால் தானே
நான் நினைப்பதற்கு..!

அன்னையை மறந்தேன் எனில்
அகிலத்தை மறந்தவனாவேன்..!
அய்யனை மறந்தேன் எனில்
அறிவை மறந்தவனாவேன்..!
உன்னை மறந்தேன் எனில்
உயிரையே மறந்தவனாவேன்..!
என்னுடல் கூடு மட்டும்தானிங்கே...
என்னுயிரும் உறவும் நினைவும்
எக்கணமும் உன்னைச் சுற்றியே..!

காதலுக்கு அனுமதி..?


ரோஜாவிடம் அனுமதி கேட்டு
பனித்துளி அதன்மேல் படர்வதில்லை..!
நிலவிடம் அனுமதி கேட்டு
அல்லி மலர் அழகாய்ப் பூப்பதில்லை...
பூவிடம் அனுமதி கேட்டு
தேனை வண்டு குடிப்பதில்லை..!
அதே போலத்தான்
யாரிடமும் அனுமதி கேட்டு
வருவதில்லை காதல்..!
அன்பொழுகும் அழகைக் கண்டால்
ஆர்ப்பரித்து வந்து விடும் காதல்..!
உன் மேல் நான் கொண்டதைப் போல..!

உள்ளத்தின் வலிகளை..!


உள்ளத்தின் வலிகளை
உரியவளிடம் சொன்னால்...
வலியது மறையும்
என்றாய் பெண்ணே..!
என் உள்ளத்தின் வலியே
நீயென்றால் நான்
யாரிடம் போய்ச் சொல்ல..!

நான் தரும் பரிசு..!


என்னை வலுக்கட்டாயமாக
நிர்வாணப்படுத்திப்
பார்த்த உன் கண்களுக்கு
நான் தரும் பரிசுதான்
கண்ணீர்..!
வெட்டுப் பட்டு
வீழும் போதும்
வீரமாய்ச் சொன்னது
வெங்காயம்..!

நம்பிக்கை அற்று இருப்பவனுக்கு..!


நம்பிக்கை அற்று இருப்பவனுக்கு
நம்பிக்கை கொடுப்பதும்
நம்பி 'கை' கொடுப்பதும் நட்பே..!

பசியால் கிடந்து துடிப்பவனுக்கு
அன்னை போல் அமுது கொடுப்பதும்
அன்பைக் கொடுப்பதும் நட்பே..!

தனக்கு சரி சமமான இடத்தை
சபையில் கொடுப்பதும்
சரித்திரத்தில் கொடுப்பதும் நட்பே..!

இக்கட்டான சூழலில் மதி தடுமாறும் போது
மதி மந்திரியாய் செயல்படுவதும்
மந்திராலோசனை சொல்வதும் நட்பே..!

உடன் பிறந்த உறவுகள் கைவிட்டாலும்
உரியவள் கை விட்டாலும்
என்றும் கைதாங்கி நிற்பதென் நட்பே..!

நம் வாழ்வில் திடீரென்று நடக்கின்ற
இன்பத்தில் இணைந்திருப்பதும்
துயரத்தில் துணை நிற்பதும் தூய நட்பே..!

பிரதிபலன் எதிர்பார்க்கும் உறவுகளில்
எதையும் எதிர்பார்க்காமலும்
எதையும் விட்டுத் தரும் உறவே நட்பு..!

சுயநலம் மிக்க உறவுகள் இடையே
நட்பின் நலம் கருதுவதும்
நலிந்தால் நல் உழைப்பைத் தருவதும் நட்பே..!

தம் பெற்றோர் மற்றும் உறவினரிடையே
நமை விட்டுக் கொடுக்காமலிருப்பதும்
நம் நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருப்பதும் நட்பே..!

காதல், அன்பு, பாசம் ஆகிய மூன்றெழுத்து
மந்திரங்களின் மொத்த உருவமாக இருப்பதும்
மனத்துயர்களை நீக்குவதும் நட்பே..!

உயிரெடுக்கும் எமனே வரினும் அவனை எதிர் கொள்ள
என்னோடு தன்னிரு தோள் தட்டி நிற்பதும்
நான் துவளுகையில் தோள் தாங்கி நிற்பதும் நட்பே..!

(இன்னும் எத்தனையோ எந்நட்பில் இருக்கின்றன. இக்கவிதைப் படையலை என் அன்புக்குரிய நண்பர்கள் அனைவருக்கும், உலகத்திலுள்ள அத்தனை நண்பர்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்.


நட்பு மட்டும் என் வாழ்வில் இல்லையென்றால், என்றோ நான் வீழ்ந்திருப்பேன்... நான் வளர வேண்டும் என்று துடிக்கின்ற நட்புகளால்தான், நான் இங்கே துடிப்புடன் வளர்ந்து கொண்டிருக்கிறேன்.

வெகு சீக்கிரத்தில்..!






நீ எனைப் பிரிந்து இருக்கும்
நாட்களில் எல்லாம்
வெகு சீக்கிரத்தில்
தூங்கப் போய்விடுகிறேன்..!
ஏனெனில்...
கனவினில் உன்னோடு
சேர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக..!

(உங்களுக்கு காதலி  இருந்தால் மட்டும் இக்கவிதை பொருந்தும்...)


 (உங்கள் காதலிக்கு, ஒரு தங்கையும் இருந்தால் கீழே வரும் கவிதை பொருந்தும்...)

நீ எனைப் பிரிந்து இருக்கும்
நாட்களில் எல்லாம்

வெகு சீக்கிரத்தில் 
தூங்கப் போய்விடுகிறேன்..!
ஏனெனில்...
கனவினில் உன்னோடு
சேர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக..!
ஆனாலெனை அங்கும் வந்து
இம்சிக்கிறாள்
உன்னழகுத் தங்கை..!
அவளை நான் என்ன செய்ய..?

(ஐயோ... அடிக்காதீங்க.... அடிக்காதீங்க..!)


(பின்குறிப்பு: உங்கள் காதலிக்கு அழகான தங்கை இல்லையெனில், அவளது தோழியை இங்கே சுட்டலாம்..! உங்கள் காதலிக்கு தங்கையும், தோழியும் இருந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல...!)

அகதிகளாய் நாம்..!


நம் கண்களிரண்டும்
ஒன்றாக கலந்த நாளிலிருந்து
உன்னிடத்தில் நானும்...
என்னிடத்தில் நீயுமாய்
வாழ்ந்து வருகிறோம்..!

என்ன சாப்பிட்டாய்...
ஏது செய்கிறாய்...
என்று இங்கிருந்து நான் வினவ
அங்கிருந்து நீ வினவியபடி...
நம் விசாரிப்புகளை நீட்டிக்கிறோம்..!

அருகருகே உள்ள வீடுகளில்
குடியிருந்தாலும்...
நம் பெற்றோர்கள் இட்ட
சண்டைகளினால்
அகதிகளாய் நாம்..!

சொல் எப்படி என்று..?



என்னோடு பேசும் போது மட்டும்
உன் பூ முகத்தில்
ஆயிரம் புன்னகை பூக்கள்
ஓரே நேரத்தில்
பூக்கின்றனவே அதெப்படி..?

என்னோடு உரையாடும் போது மட்டும்
மண்ணென்றும் கல்லென்றும்
பாராமல் உன்
மென்தண்டுக் கால்கள்
தானாக கோலமிடுகிறதே அதெப்படி..?

என் கண்ணோடு பேசும் போது மட்டும்
உன் கண்களிரண்டும்
கருவண்டை மறைக்கும்
வண்ணத்துப் பூச்சி போல் 
மிக வேகமாக படபடக்கிறதே அதெப்படி..?

என்னோடு பேசும் போது மட்டும்
உன் முகம் மதி மயக்கும்
மாலை நேரத்து
அடிவானச் சூரியனாய்
சிவந்து போகிறதே அதெப்படி..?

எப்படி எப்படி என்று
உன்னிடத்தில் எதைக் கேட்டாலும்
குழந்தைச் சிரிப்பை
பதிலாகத் தருகிறாயே..?
அதையேனும் சொல் எப்படி என்று..?

வெட்கப் புன்னகையில்..!



செங்குருதி பாய்ந்தது போல்
வேலியில் பூத்த செங்காந்தள் மலர்தான்
இதுவரை அழகென்றிருந்தேன்..!
வெட்கத்தில் பூத்த மலர் கூட
இவ்வளவு அழகா என்று
உன் வெட்கப் புன்னகையைக் கண்டதும்
கண்டுகொண்டேன்..!

நான் மட்டும் இங்கே..!



வைகாசி முழுநிலவு
வண்ணம் கலையாமலிருக்க...
ஊரு சனம் எல்லாம்
வண்டி கட்டி சென்றது
வைகையாற்றங்கரையில்
நிலாச் சோறு சாப்பிட...
நான் மட்டும் இங்கே
நீயின்றி நீட்டிப் படுத்திருக்கிறேன்
நம் வீட்டில் அமாவாசையாய்..!

வான் மகளாய் நீயிருக்க..!


பூத்தாலும் நட்சத்திரமாய் பூக்கிறாய்..!
சிரித்தாலும் வெண்ணிலவாய் சிரிக்கிறாய்..!
தும்மினாலும் பனித்துளியாய் தும்முகிறாய்..!
பார்த்தாலும் மின்னலாய்ப் பார்க்கிறாய்..!
இறங்கினாலும் என்னுள் இடியென இறங்குகிறாய்..!
விரிந்தாலும் கார்மேகக் கூந்தாலாய் விரிகிறாய்..!
இப்படி வான் மகளாய் நீயிருக்க...
புவிமகனாய் காத்திருக்கிறேன்...
உன் காதலெனும் மழைப்பொழிவிற்கு..!

உதட்டினில் ஒன்று குவித்து..!


தொலைதூரத்தில் இருந்தாலும்
உன் உணர்வுகளை எல்லாம்
உதட்டினில் ஒன்று குவித்து
அலைபேசி வழியே அனுப்புகிறாய்
அன்பு முத்தமாக..!
அலைகடல் தாண்டி
அதிர்வலைகளின் வழியே
பயணித்து வரும் 
அம்முத்தம்
என் செவியினைத் தீண்டி
உன் அன்பைச் சொல்கிறது
சத்தமாய்... அதுவே எனக்கு சத்துமாய்..!

பொன் கிடைத்தாலும்..!


பொன் கிடைத்தாலும்
புதன் கிடைக்காதென்பார்கள்...
ஊருக்குச் சென்ற என்னவள்
இப்புதனில் அதர வாய் திறந்தாள்...
'வரும் திங்கள்ன்று உனை
சந்திக்க வருகிறேன்' என்றாள்..!
புதன் புத்துணர்ச்சியில் போக
வியாழன் விறுவிறுவென மறைய
முளைக்கும் வெள்ளியோ
முகத்திரைய மூட...
சட்டென்று உதிக்கும்
சனியும் மறைய...
என் உள்ளம் மகிழவே
ஞாயிறு உதிக்கிறான்..!
என்னவள் கிளம்பும் நேரத்தில்
ஞாயிறு மறையும்...
திங்களின் காலையின்
என்றன் திங்கள் மலரும்..!
என் திடீர் சாபமும் நீங்கும்...
இன்றே அந்த திங்கள் நாளாகாதா?
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்
என் தேவியின் தரிசனத்திற்காக..!

எனக்கு நேரமில்லை..!


என்னிடம் அதைப்படி
இதைப்படி என்று... 
எதை எதையோ
எடுத்துக் கொடுக்கிறாய் அன்பே!
எதையும் படிக்க
எனக்கு நேரமில்லை..!
காரணம்...
உன்னையும்
உன்னிதழையும்
படித்துக் கொண்டிருப்பதால்..!

தூரத்தில் தேவதையாய்..!

நள்ளிரவுப் பெண்ணோ
நைச்சியமாய்
ஒளிந்து கொள்ள முயற்சிக்க...
அதிகாலைச் சூரியனோ
அடித்துப் போட்டது
போல் உறங்கிக் கொண்டிருக்க...
உருண்டை வடிவ உலகமோ
விடியலுக்காக
கண்ணயர்ந்து காத்திருக்க...
கணமணி உன் வரவிற்காக
கண் விழித்துக் காத்திருந்தேன்
புவி முனையில்...

காத்திருந்து காத்திருந்து
கால்கள் ஓய்ந்து விட
கண்கள் சோர்ந்து விட
தூரத்தில் தேவதையாய்
நீ வருவதைக் கண்டேன்..!
நெடும்பயண களைப்பில்
நடை தளர்ந்து நீ வந்தாலும்
எனைக்கண்டதும்
ஒளிவீசும் வைரமானாய்..!
அவ்வொளி வெளிச்சம்
உனைக் கண்டதும்
என்னுள்ளும் பரவ...!

நம் கண்கள் நான்கும்
சந்தித்த வேளையில்...
அங்கே உதித்ததடி நம்
காதலின் உற்சாகச் சூரியன்...
அதனுடைய வெளிச்சத்தில்
இருந்த களைப்பு
இடம் தெரியாமல் போய்விட...
என் நிலவைக் கண்ட மகிழ்வில்
என்னிதயம் விண்ணிலடி
என்னழகே உன் அன்பு
என் கண்ணிலடி..! கண்ணிலடி..!

உதாசீனப்படுத்தும் சொல் கூட..!


ச்சீ…” என்று
உதாசீனப்படுத்தும் சொல் கூட
நீ வெட்கத்தில்
உதிர்க்கும் போது
மேலும் மேலும் உன்னோடு
உறவாடத்தான் தோன்றுகிறதே தவிர...
உனை விட்டுப் பிரியத் தோன்றவில்லை..!

பூக்கள் மலரும் காலம்!


தாமரை மலரோ
உதயகாலத்தில் மலரும்..!
செண்பக மலரோ
காலையில் மலரும்..!
பவழ மல்லிகையோ
மாலையில் மலரும்..!
மயக்கும் மல்லிகையோ
இரவினில் மலரும்..!
அழகினிய அல்லியோ
நிலவின் உறவினில் மலரும்..!
என் இதய மலரோ
உனை நினைத்ததுமே மலருமடி!

வளர் கூந்தல்..!



கருங்கூந்தல் விளையாடும்
கடலலை போலே...
நீள்கூந்தல் அசைந்தாடும்
நிழலினைப் போலே...
கார்கூந்தல் விளையாடும்
கார்மேகம் போலே...
வளர் கூந்தல் வைத்திருக்கும்
வளர் மதியே...
நின் கூந்தல் வளரும்
கரு மதியே..!

உன் காதலுக்கு..!



கவிச்சக்கரவர்த்தி கம்பன்...
மகாகவி பாரதியார்...
புரட்சிக்கவி பாரதிதாசன்...

என மாபெரும் கவிஞர்களைப் போல
எனை ஆக்க விட்டாலும்
ஒரு குறுங் கவிஞனாக
மாற்றிய பெருமை
உன் காதலுக்கு உண்டு கண்ணே..!

பிரிவு எனும் மூன்றெழுத்து..!



காதல் என்ற மூன்றெழுத்தின்
மந்திரமே அதில் பின்னியிருக்கும்
அன்பு எனும் மூன்றெழுத்துதான்..!

அதிலே பிரிவு எனும் மூன்றெழுத்து வரின்
தேகம் எனும் மூன்றெழுத்தில்
சோகம் எனும் மூன்றெழுத்து ஏறிவிடும்..!

மனம் எனும் மூன்றெழுத்து
ரணம் எனும் மூன்றெழுத்தில் மூழ்கி
குணம் காணா கூடாகி விடும்..!

பிரிவென்னும் மூன்றெழுத்து இனி எதற்கு...
இணைவு என்ற மூன்றெழுத்தில்
இணை பிரியாமலிருப்போம் தேவி..!

ஞாயிறு, 4 மார்ச், 2012

கண்ணீர் காதல்..!


நீ என் கண்ணுக்குள்
இருப்பதால்
என்னுள் இருந்து
கண்ணீர் வருவதில்லை..!
என் கண்களிலிருந்து
கண்ணீர் வருகையில்
நீ என்னுள் இருப்பதில்லை..!

கொடுத்துப் பிரிந்தவள்..!





காத்திருக்கும் கண்களுக்கு
வியர்த்துப் போனால்
அது கண்ணீர்..!
காத்திருக்கும் கண்கள்
கவிதை பாடினால்
அது காதல்..!
இந்த இரண்டையும்
ஒரு சேரக் கொடுத்தவளும் நீ..!
கொடுத்துப் பிரிந்தவளும் நீ..!

கட்டற்ற காதலுக்குள்..!


கட்டற்ற காதலுக்குள்
கட்டுப்பாடுகள்
விதித்துக் கொண்டோம்!
கண்ணியமாய் நடந்து கொள்ள
உணர்வுகளைப்
புதைத்துக்கொண்டோம்..!
உன் உயிரினை
நான் தொடும் போதும்
என் உயிரினை
நீ தொடும் போதும்
எட்ட நின்று
ஏக்கப் பெருமூச்சு கண்டோம்..!
காலம் தாழ்த்தி
சந்தித்தது ஏன் என்று
வினவியபடி...
நீ விதியைக் குறை சொன்னாய்
நான் மதியைக் குறை சொன்னேன்...
காலம் நமைப் பார்த்து சிரித்தது
அது நான் செய்த சதியென்று..!

உனை வெல்ல..!

உன்னழகை வெல்ல வேண்டி
கவிச் சொல்லெடுத்து வந்தேன்...
நீயோ இமைகளெனும்
வில்லெடுத்தாய்...
நானும் அதற்கிணையாய்
வில்லேந்தி வந்தால்
நீயோ விழிகளெனும்
வேலேந்தி வந்தாய்...
நானும் அதற்கிணையாய்
வேலேந்தி வந்தால்
நீயோ காதலேந்தி வருகிறாய்...
உனை வெல்ல மோதலோடு வந்த நான்
உன் காதலால் தோற்றபடி
உன்னிடம் காதல் கைதியானேன்!

கூடலும்... ஊடலும்..!


கூடல்தான் காதலெனும் போது
அதில் ஊடல் வருவது இயல்பல்லவா..?
ஊடலை ஊதிப் பெரிதாக்கி
எனை உதறித் தள்ளுவதேனடி..?

நீ அருகிலிருந்தால் அன்பில்லை
தொலைவில் இருந்தால் தொல்லையில்லை
என்று சொன்ன உன் நாவை
என்ன சொல்லி வெட்டி எறிய வேண்டுமடி..?

தேனுண்ட வண்டைப் போல்
உன் காதலையுண்டு மகிழ்ந்திருந்த எனக்கு
அலைபேசியில் நீ பேசிய வார்த்தைகள்
அமிலமாய் கொட்டியதடி.!

என்னை இன்னும் நீ
புரிந்து கொள்ளவில்லையே
அது ஏனென்று கேட்டு
என் மனம் உன்னை திட்டித் தீர்த்ததடி..!

முத்தில்லா சிப்பி போல...
மருந்தில்லா குப்பி போல...
நீயின்றி வெறுமையாய் கிடக்கிறேன்
எப்போது வருவாய்... ஊடலை கூடலாக்குவாய்..!

இரும்பை இலவம் பஞ்சு வளைக்குமா?


வளையா இரும்பை
இலவம் பஞ்சு வளைக்குமா?
துளைக்குமா..?
இவ்வுலகில் நடவாத ஒன்றை
கேட்கிறாயே அறிவிலி...
என்று எனை எல்லோரும்
ஏளனம் செய்கிறார்கள்..!
நீ என் மார்பில் சாய்ந்த போது
இது அத்தனையும்
நடந்ததை யாரறிவார்..?

நீ அறிவாயா..?


என் கவிதைகளனைத்தும்
அழகான கவிக்குழந்தைகள்
என்று சொல்கிறாயே பெண்ணே
அவர்களெல்லாம்
உனை பார்தத பின்
பிறந்த கவிப் பிள்ளைகள்
என்பதை நீ அறிவாயா..?

இப்படிக்கு ராணுவ வீரன்..!




உனது கரு வானவில்
புருவங்களை உயர்த்திபடி
எனை பார்க்காதே...
உன் செந்தாமரை இதழ்களை
உனக்குள் சுழற்றியபடி
எனை பார்க்காதே...
கண்ணீர் புகை குண்டிற்கு கூட
மயங்காத நான்...
கன்னி உன் செய்கைகளால்
இங்கே மயங்கிக் கொண்டிருக்கிறேன்..!

மழையினை ரசிக்கும்..!



எனை விடுத்து...
மழையினை ரசிக்கும்
என் மதி மலரே..!

மழை முகம் கண்டதும்...
உன் புன்னகையை மேகத்திடம்
காட்ட சென்றாயோ..?

உன் புன்னகை கண்டு
பூரித்த மழை மேகமோ
கண்ணை மின்னலாய் சிமிட்டியதோ..?

உன் கார் கூந்தலைக் கண்டு
பொறாமை கொண்ட வானமகள்
தன் மேகக் கூந்தலை மென்மேலும்
கருமையாக்கியாக்கினாளோ..?

இவை எதையும் நானறியேன்...
வான் நிலவை மறைத்த மேகம்
மழையாய்ப் பொழிவது போல்...
என் நிலவை குடையால்
மறைத்து காதலைப் பொழிவேனடி..!

எவையெல்லாம் கவிதை..?


எவையெல்லாம் கவிதை
என சொல்வாய்..?
என்று என்னிடம் வினவுகிறாய்...
நீ உதடு பிரித்து படிப்பது
கூட கவிதைதானடி என்றேன்...
அழகாய் சிரித்து...
அழகாய் இருக்கிறது
உங்களது பொய் என்கிறாய்...
உன் சிரிப்புக்கு முன்பு
அவையெல்லாம் சாதரணமே
உன் சிரிப்பை காணா விடில்
என் மனம் சதா ரணமே...
என்றேன்
போய்யா போ..
என்று பொய்க்கோபம்
காட்டியே எனை மயக்குகிறாயடி..!
இந்த மயக்கத்தில்
என் சிந்தனைச் சிறகு
சிறகு விரிக்காமல் எப்படி இருக்கும்?

இதழ் விரிந்தால்..!


பூக்களின் இதழ்
விரிந்தால்
புன்னகை மலரும் ..!
பூவிலிருந்து மணம்
விரிந்தால்
முகமே மலரும்..!
பூவினமே உன் இதழ்
விரிந்தால்
என் வாழ்வே மலருமடி ...!

எப்போது நீ வருவாய்..?


நிலவின் தீண்டலுக்காக
மேக கூட்டங்கள் காத்திருப்பது போல...
பனித்துளியின் தீண்டலுக்காக
பூ கூட்டங்கள் காத்திருப்பது போல...
மழையின் தீண்டலுக்காக
கரிசல் காடு காத்திருப்பது போல...
பூந்தேனின் தீண்டலுக்காக
வண்டினங்கள் காத்திருப்பது போல...
ஒரு பெண் பூவிற்காக
என் புவனமே காத்திருகிறது
பூவினமே எப்போது நீ வருவாய்..?

பொட்டிட்ட புதுப்பானையில்..! - பொங்கல் வாழ்த்து கவிதை






பொட்டிட்ட புதுப்பானையில்
பொங்குகின்ற பொங்கல் போல்
தங்க மனம் கொண்ட
தமிழர்களின் வாழ்விலும்
தமிழ் நகை பொங்கட்டும்..!

பொன்னான புதுப்பானையில்
பொங்கி வரும் வெண்நுரை போல்
வெள்ளை மனம் கொண்ட
வெள்ளந்தி தமிழர்களின் வாழ்வில்
வெற்றிகள் குவியட்டும்..!

சூரியனார்க்கு நன்றி சொல்லும்
சுந்தரமான பொங்கல் பொல்
சூதில்லா மனம் கொண்ட
சுத்தமான தமிழர்களின் வாழ்வில்
சுகவாழ்வு பெருகட்டும்..!

தரணியை தழைக்கச் செய்யும்
தைமகள் பிறப்பிற்கும்
எருதின் உழைப்பிற்கும் நன்றி சொல்லும்
நல்மனம் கொண்ட தமிழர்களின் வாழ்வில்
நலம் பல திரளட்டும்...
நன்மைகளே விளையட்டும்..!

புலம் பெயர்ந்த தமிழருக்கும்
புலம் பெயரா தமிழருக்கும்
பொங்கலோ பொங்கல்
பொங்குக தமிழ்ப் பொங்கல்..!
பொங்குக எங்கும் மகிழ்ச்சிப் பொங்கல்..!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அம்மா.


அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.
மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.
பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .
என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.
அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?
எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?
வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?
எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?
உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?
இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.
எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.
போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்
இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.

காதல் வேண்டுதல்


கடற்கரையில்
பூங்காக்களில்
ஆளில்லாத
பேருந்து நிறுத்தங்களில்
எங்கும் சந்திக்க முடிகிறது
காதலர்களை.
பெரும்பாலும்
வெட்கக் குமிழ்களை
உடைத்துக் கொண்டோ ,
கைரேகை
நீளங்களை
அளந்து கொண்டோ ,
கவித்துவமாய்க்
கொஞ்சிக் கொண்டோ ,
பொய்யாய்
சினந்து கொண்டோ ,
அனைவருமே
ஆனந்தமாய் இருக்கிறார்கள்.
இந்தக் காதல் எல்லாம்
தோற்றுப் போய்விடின்
எத்துணை நன்றாய் இருக்கும் ?
“சேர்ந்திருந்தால்
சுகமாய் வாழ்ந்திருப்போம்”
என்னும்
நம்பிக்கைகளாவது
மிச்சமிருக்கும்.